Tuesday 20 September 2016

விவிலிய நாவல்: 1-3

 வானம் பூமி, மற்றும் அவற்றின் மற்ற  துணைத்தொகுதிகளும் சிருஷ்டிக்கப்பட்டுமுடிந்தன .  ஏழாம் நாள் உதித்தது . பரமபிதா ஓய்வெடுத்தபடி தம் சிருஷ்டிகளைக் கவனித்து மகிழ்ச்சி அடைந்தார்.  ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.சுற்றிலும் கண்ணோட்டமிட்டார். இன்னும் சில படைப்புகள் பாக்கியிருந்தன.
எல்லா விதமான செடிகள். எல்லா விதமான பூண்டுகள். அவை இல்லை. ஏனெனில் பரமபிதா பூமியின்மேல் இன்னும் மழை பெய்விக்கவில்லை. 
அப்படி அது பெய்தாலும்  நிலத்தைப் பண்படுத்த ஒரு ஜீவன் -மனிதன் இல்லை 
மழை பெய்விக்க மூடுபனியை  பூமியிலிருந்து  எழுப்பினார். அது எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.
பரமபிதா தம் கற்பனையால் மனிதனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்மாவானான்.மீண்டும் கர்த்தராகிய பரமபிதா யோசித்தார். இவனை எங்கே குடிவைப்பது?
கிழக்கு என்று வகுத்த திசையிலே  ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உருவாக்கினார்.மனிதனை அங்கே கொண்டு போய் குடி வைத்தார்.தன படைப்புகளை நிர்வகிக்க ஒரு சிறந்த தந்தைக்கு என்னென்ன யோசனை எல்லாம் உண்டாகுமோ அவை எல்லாம் பராமபிதாவின் சித்தத்தில் உதித்தன. 
மனிதன் புசிப்பதற்கு அழகான,நல்ல ,மரங்கள் தேவை அல்லவா? ஏதேன் தோட்டத்திற்கு நீர் பாய்ச்ச நதி தேவை அல்லவா? உருவாக்கினார். ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று.
முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும்.
அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக் கல்லும் உண்டு.
இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.
மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத் என்று பேர்.இப்போது ஏதேன் தோட்டத்துக்கு நாலாப்பக்கத்திலிருந்தும் நீர் பாய்ந்தது. 
 ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அவும் வைத்தார்.
பிறகு கர்த்தர் மனிதனை நோக்கி " நீ தோட்டத்தைப் பண்படுத்து. காவல் இரு. நீ எல்லா மரத்துக்கு கனிகளையும் புசிக்கலாம். ஆனால் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் மாண்டு போவாய் "என்று கட்டளையிட்டார்.
ஏதேன் தோட்டத்தில் தனிமையாய் உலவும் மனிதனைப் பார்க்கும்போது அவர் மனம் இரங்கிற்று 
"இவன்  தனிமையில் இருக்கிறான். அது  நல்லதல்ல,  இவனுக்கு ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்" என்றார்.
கர்த்தராகிய பரமபிதா அவனுக்குத் துணை இருக்க எல்லா வகை  சகலவித மிருகங்களையும் எல்லா வகைப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கினார்.,
ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் பார்க்கலாம் என்று அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த உயிரிகளுக்கு ஒவ்வொரு பெயர் வைத்தான். ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அவற்றுக்குப்  பேராயிற்று.
அப்போதும் அவன் தனிமை நீங்காததை கர்த்தராகிய பரபிதா கண்டார்.   ஏற்ற துணை வேறொன்று வேண்டும். ஆதாமுக்கு அயர்ந்த உறக்கம் வரவழைத்தார். அவன் உறங்கத்தொடங்கினான். அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை உருவி எடுத்தார். பிறகு அந்த வெற்றிடத்தைச் சதையினால் அடைத்தார்.
பரமபிதா  தாம் மனிதனிடம்  எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை அவ னிடத்தில் கொண்டு வந்தார்.
"இவளுக்குப் பெயர் வை"என்று பரமபிதா அவனிடம் கேட்டார். 
 "இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனிதனாகிய என்னில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள்" என்றான்.
இதன்படி ஒரு மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று சிந்தித்தார். 
ஆதாமும் அவன் மனைவியும்  நிர்வாணிகளாயிருந்தார்கள். வெட்கம் என்ற உணர்வை அவர்கள் அறிந்திருக்கவில்லை.எனவே வெட்கப்படாதிருந்தார்கள்.
[தொடரும்]

Saturday 10 September 2016

விவிலிய நாவல்: 1-2

                                                                  2
கர்த்தராகிய பரமபிதா தான் உருவாக்கிய பூமியைத் திரும்பிப் பார்த்தார். அது ஒன்றுமில்லாத வெறுமையாக இருந்தது.சிருஷ்டியின் ஊக்கம் அவருக்குள் மேலும் பெருக்கெடுத்தது. அவரது அளவே இல்லாத கற்பனை ஆற்றலால் பூமியை மேலும் பொலிவுறச் செய்ய வேண்டுமென்ற எண்ணம் உதித்தது 
கர்த்தராகிய பரமபிதா."பூமியே! உன் மீது புல் முளைக்கட்டும்" என்றார். புல் முளைத்தது. 
மேலும் அவரது கற்பனை கிளர்ந்தது.  விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகள்,பூண்டுகளில் இருந்து   தங்கள் விதையையுடைய பழங்களைத் தாங்கி அதே விதமான பழங்களைத் தரும் மரங்கள் இவை உன் மீது முளைக்கட்டும்" என்றார். 
அவரது ஆணைக்குக்கீழ்ப்பட்டு, பூமியில் , தங்கள் இனத்திற்குரிய   விதையைப் பிறப்பிக்கும்  பூண்டுகள், தங்கள் தங்கள் இனத்திற்குரிய தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் மரங்களையும் முளைப்பித்தது; 
பரமபிதாஅவை நல்லவை  என்று உணர்ந்தார்.

மீண்டும் மாலை வந்தது. விடியற்காலம் ஆனது.  மூன்றாம் நாள் பிறந்தது.பரமபிதா ஒரு பகல் போலவே மற்றொன்றும் இருப்பதையும், ஓர் இரவு போலவே மற்றோர் இரவும் இருப்பதையும் உணர்ந்தார்.இவற்றை ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்திக் காட்ட வேறொரு அடையாளம் தேவை அல்லவா? சிந்தித்தார்.
 "வானவிரிவிலே சுடர்கள் உண்டாகட்டும்" என்று கட்டளை இட்டார்.அது அப்படியே ஆயிற்று.. அவை  அடையாளங்கள்,  காலங்கள் , நாட்கள்,  வருஷங்கள்  குறிக்கட்டும் என்று ஆணை பிறப்பித்தார். அவ்வாறே ஆயிற்று. 
கர்த்தராகிய பரமபிதா பகற்பொழுதை    ஆளப் பெரிய ஜோதியான சூரியனையும் இரவுப்பொழுதை  ஆளச் சிறிய ஜோதியான சந்திரனையும் ,நட்சத்திரங்களையும் சிருஷ்டித்தார். .அவை  பூமியின்மேல் அவ்வாறே பிரகாசிக்கத்தொடங்கின. அவைகளை வானம் என்கிற ஆகாய விரிவிலே வைத்தார்; பரமபிதா அது நல்லது என்று கண்டார்.
சாயங்காலமும் விடியற்காலமும் தொடர்ந்தன.  நாலாம் நாள் பிறந்தது. 
மீண்டும் பரமபிதாவின் படைப்பூக்கம் பெருக்கெடுத்தது. பூமியின் மீது புல்லும் பூண்டும் கனி தரும் மரங்களும் மட்டும் போதாது .ஆகாயத்திலும் சமுத்திரத்திலும் உயிர் நடமாட்டம் வேண்டும் என்று எண்ணினார்.

பரமபிதா  நீந்தும் வல்லமை உடைய உயிர்க்கூட்டங்களையும் ,ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், நீர்ப்பெருக்கானது உருவாக்கவேண்டும் என்று கட்டளை இட்டார். மாபெரும் மீன்களும், தங்கள் இனத்திற்குரியவை போன்ற பல்வேறு நீர்வாழ் உயிரிகளும் பிறந்தன.  அடுத்து சிறகுகள் உள்ள பல்வேறு வகைப் பறவைகள் வானில் பறக்கட்டும் என்று கட்டளை இட்டார். அவ்வாறே  பறவைகள் பிறந்தன .
பிறகு பரமபிதா , நீங்கள் பல்கிப் பெருகி, சமுத்திரத்தை நிரப்புங்கள்;, பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார். அவ்வாறே அவை பல்கிப் பெருகத்தொடங்கின.
அடுத்த மாலைபொழுது வந்தது. அடுத்து விடியற்காலமாகி பொழுது விடிந்தது.ஐந்தாம் நாள் ஆயிற்று.
பரமபிதாவின் படைப்பூக்கம் மேலும்  பெருக்கெடுத்தது.  "பூமியே உன்னிடம் பல்வகை இனமிருகங்களும், ஊர்ந்து செல்லும் உயிர்களும், காட்டு மிருகங்களும், இனம் இனமாகப்  பிறக்கட்டும் "என்றார்.
அவ்வாறே யாவும் பிறந்தன. பரமபிதா  மகிழ்ச்சி அடைந்தார். பரமபிதாவின் படைப்பூக்கம் மற்றொரு ஊற்றாய்ப் பெருகியது.
                                               
"நமது சாயலாகவும் நமது உருவின்படியும் மனிதனை  உண்டாக்குவோமாக; அவனது இனம் பெருகி அவனது இனத்தினர் சமுத்திரத்தின் மீன்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருக உயிர்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊர்கின்ற  எல்லா உயிர்க்கூட்டத்தையும் ஆளட்டும்" என்று கருதினார்.  
பரமபிதா தமது சாயலில்  மனிதனைச் சிருஷ்டித்தார், அவனுக்குத் துணை வேண்டுமெனக் கருதினார். பெண்ணை உருவாக்கினார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
அவர்களை நோக்கி:" நீங்கள் பல்கிப்பெருகி, பூமியை நிரப்புங்கள் , அதைக் கீழ்ப்படுத்திக்கொள்ளுங்கள்., சமுத்திரத்தின் மீன்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற எல்லா உயிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள்" என்று  அவர்களை ஆசீர்வதித்தார்.
பறவைகள்,மீன்கள்,விலங்குகள், ஊரும் உயிரினங்கள் என எல்லாவற்றிற்கும் உணவுக்கு வழியமைத்த நிறைவில் எல்லாவற்றையும் ஒருமுறை பார்த்தார். மிகவும் மகிழ்ச்சி கொண்டார்.  , மறுமாலை வந்து மறுகாலையும் வந்து பொழுது விடிந்தது .
ஆறாம் நாள் ஆயிற்று.
[தொடரும்]

Friday 9 September 2016

விவிலியம் நாவல்:அத்தியாயம்:1 -1

                         விவிலியம் நாவல் வடிவில் 
புனித விவிலியம் பலநூறு மொழிகளில் பலநூற்றாண்டுகளாக பல்வேறு வடிவங்களில் பல்கோடிப் பேர்களால் வாசிக்கப்பட்டு வருகிற புனித நூல் . மிகச் சிறந்த திரைப்படங்களாக, தொலைக்காட்சித் தொடர்களாக, ஒலிப்பேழைகளாக நூற்றுக்கணக்கான  வகைகளில் அது பலரால் பார்க்கப்பட்டு,கேட்கப்பட்டு, பலகோடி இதயங்களால் மனனம் செய்யப்பட்டு வருவது. அதனை நாவலாக்கும் முயற்சிகள் கூட பலமுறை நடந்திருக்கக்கூடும்.
ஆனால் ஆயிரம் மலர்கள் பூக்கும் நந்தவனத்தில் மற்றொரு மலருக்கு எப்போதும் இடமுண்டு.
இந்தப் பணிவான தைரியத்தில் தான்,அருளாசியால் தான் , பரமபிதாவின் சித்தம் இம்முயற்சியில்  என்னை ஈடுபடுத்தியிருக்கிறது.
இதற்கு எனக்குள்ள ஒரே தகுதி பதினாறு வயதில் என் கிராமத்து பஞ்சாயத்து நூலகத்தில் எனக்கு வாசிக்கக் கிடைத்த பைபிள் வாசிப்பு தான். அது நேசமாகி பற்பல ஆண்டுகளாக எனக்குள் பிரகாசித்து வரும் அருள் ஒளி தான்.பரமபிதாவின் முன் மண்டியிட்டு வணங்கி இம்முயற்சியைத் தொடர்கிறேன்.
-வையவன்                                     
                                                            ஆதியாகமம் 
                                                        அத்தியாயம்:1 
ஆதியிலே கர்த்தராகிய பரமபிதா தான் முதற்பொருளாகி தாம் மட்டும் தனியே அகண்ட சூனியவெளியில் நிறைந்திருந்தார். தனிமை.தனிமை.சொல்லும் அது கோர்த்துத் தரும் எண்ணங்களும் எட்டித்தொடமுடியாத உணர்வு தான். அந்தத் தனிமை உணர்வால் அவர் வருந்தவில்லை.எனினும் தாமே தனித்தனி வடிவாகி,தம்முள்ளே தாம் திளைக்கும் எண்ணம் அவருக்குத் தோன்றியது.
பரமபிதா இரு கரங்களையும் விரித்துத் தம் விருப்பத்தை அந்தச் சூனியத்திற்கு அறிவித்தார்.
 வானம் உருவானது.

மேலே தலை உயர்த்திப் பார்த்திப்பார்த்தபோது வானத்தின் கீழே தங்கியிருக்கவேண்டிய  ஏதோ ஒன்று தேவை என உணர்ந்தார். விரலை நீட்டினார். பூமி பிறந்தது
                               

.
வானத்தையும் பூமியையும் மாறிமாறிப்பார்வையிட்டபோது பூமி ஒழுங்கீனமாய் இருப்பதைக் கண்டார். அதிலே ஒரு வெறுமை தெரிந்தது. ஆழம் தெரிந்தது. ஆழத்தின்மேல் கனத்த காரிருள்  இருந்தது; உற்றுப்பார்த்தபோது தேவ ஆவி ஆனவர் பெரும் நீர்பெருக்கின் மீது அசைந்தாடிக் கொண்டிருந்ததைக் கண்டார்.
இருள் எப்படி நீங்கும் என்று சிந்தித்தபோது வெளிச்சத்தின் தேவை அவர் கருத்தில் உதித்தது 
பரமபிதா"வெளிச்சம் உண்டாவதாக!" என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.வெளிச்சம் அவரிடம் பேசிற்று.பரமபிதாவிடம் முதலில் பேச்சுக்கொடுத்தது வெளிச்சமே!
"கர்த்தரே, நான் தங்கள் சிருஷ்டி! உங்களை பணிந்து வணங்குறேன் " என்றது 
வெளிச்சம் நல்லது என்று பரமபிதா உணர்ந்தார். 
"கர்த்தரே, உங்கள் மகிமைக்கு என் தலைவணக்கம். ஒரு பணிவான வேண்டுகோள் " என்று வெளிச்சம் வேண்டியது.
"சொல்"பரமபிதா கட்டளையிட்டார்.

                                                          
"நானும் என் நிழலாகிய இருளும் ஒருவரோடு ஒருவர் கலந்து குழம்பியுள்ளோம். தயவு கூர்ந்து எங்களைத் தனித்தனியே பிரித்து விடுங்கள் " என்று வெளிச்சம் விண்ணப்பித்தது 
"உன் வேண்டுகோள் சரியானது" என்று கூறிப் பரமபிதா வெளிச்சத்தையும் இருளையும்  வெவ்வேறாகப் பிரித்தார்.
பரமபிதா "வெளிச்சமே! உன் பெயர்  பகல்" என்றார், 
இருளுப்பார்த்து "உன் பெயர்  இரவு"  என்றார்,   இருள் கவிந்து இரவு வந்தது. மெல்ல இருள் விலகிப் பகல் வந்தது. இவ்வாறு ஒரு மாலையும் அதைத்தொடர்ந்து ஓர் இரவும் , அதன்பின் ஓர்  விடியற்காலமும் வந்தன ஒரு நாள் கழிந்ததை பரமபிதா உணர்ந்தார் .
 முதலாம் நாள் ஆயிற்று.
விடிந்த பொழுதில் பெரிய நீர்ப் பெருக்கு குமுறிக்கொண்டிருப்பதை பரமபிதா கவனித்தார். அது இரண்டு பகுதிகளாவது நல்லது என்று அவருக்குத்தோன்றியது.
பின்பு பரமபிதா "நீர்ப்பெருக்கின்  மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகுக" என்று கட்டளையிட்டார். அப்படியே ஆகாய விரிவு உண்டாயிற்று.பிறகு நீர்ப்பெருக்கிலிருந்து மற்றொரு பகுதி பிரிக என்று கட்டளை இட்டார்,
அது அப்படியே ஆயிற்று
ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற நீர்ப்பெருக்கிற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற நீர்ப்பெருக்கிற்கும் ஒரு பிரிவை உண்டாக்கி  பரமபிதா 
ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.
பரமபிதா பிரளயம் போல் குமுறும் நீர்ப்பெருக்கைக் கவனித்தார். அது ஓரிடத்தில் ஒன்று சேரவேண்டும் என்று கருதினார், அதை அடுத்து  "வெட்டாந்தரை காணப்படுவதாக " என்றார்; அது அப்படியே ஆயிற்று.
பரமபிதா வெட்டாந்தரைக்குப் "பூமி" என்றுபேரிட்டார்.
ஒன்று சேர்ந்த நீர்ப்பெருக்கிற்குச் "சமுத்திரம்" என்றும் பேரிட்டார்; சமுத்திரம் தன ஆரவார அலைமுழக்கத்தால் பரமபிதாவை வணங்கியது 
பரமபிதா அது நல்லது என்று உணர்ந்தார்.
-தொடரும் .