Friday, 9 September 2016

விவிலியம் நாவல்:அத்தியாயம்:1 -1

                         விவிலியம் நாவல் வடிவில் 
புனித விவிலியம் பலநூறு மொழிகளில் பலநூற்றாண்டுகளாக பல்வேறு வடிவங்களில் பல்கோடிப் பேர்களால் வாசிக்கப்பட்டு வருகிற புனித நூல் . மிகச் சிறந்த திரைப்படங்களாக, தொலைக்காட்சித் தொடர்களாக, ஒலிப்பேழைகளாக நூற்றுக்கணக்கான  வகைகளில் அது பலரால் பார்க்கப்பட்டு,கேட்கப்பட்டு, பலகோடி இதயங்களால் மனனம் செய்யப்பட்டு வருவது. அதனை நாவலாக்கும் முயற்சிகள் கூட பலமுறை நடந்திருக்கக்கூடும்.
ஆனால் ஆயிரம் மலர்கள் பூக்கும் நந்தவனத்தில் மற்றொரு மலருக்கு எப்போதும் இடமுண்டு.
இந்தப் பணிவான தைரியத்தில் தான்,அருளாசியால் தான் , பரமபிதாவின் சித்தம் இம்முயற்சியில்  என்னை ஈடுபடுத்தியிருக்கிறது.
இதற்கு எனக்குள்ள ஒரே தகுதி பதினாறு வயதில் என் கிராமத்து பஞ்சாயத்து நூலகத்தில் எனக்கு வாசிக்கக் கிடைத்த பைபிள் வாசிப்பு தான். அது நேசமாகி பற்பல ஆண்டுகளாக எனக்குள் பிரகாசித்து வரும் அருள் ஒளி தான்.பரமபிதாவின் முன் மண்டியிட்டு வணங்கி இம்முயற்சியைத் தொடர்கிறேன்.
-வையவன்                                     
                                                            ஆதியாகமம் 
                                                        அத்தியாயம்:1 
ஆதியிலே கர்த்தராகிய பரமபிதா தான் முதற்பொருளாகி தாம் மட்டும் தனியே அகண்ட சூனியவெளியில் நிறைந்திருந்தார். தனிமை.தனிமை.சொல்லும் அது கோர்த்துத் தரும் எண்ணங்களும் எட்டித்தொடமுடியாத உணர்வு தான். அந்தத் தனிமை உணர்வால் அவர் வருந்தவில்லை.எனினும் தாமே தனித்தனி வடிவாகி,தம்முள்ளே தாம் திளைக்கும் எண்ணம் அவருக்குத் தோன்றியது.
பரமபிதா இரு கரங்களையும் விரித்துத் தம் விருப்பத்தை அந்தச் சூனியத்திற்கு அறிவித்தார்.
 வானம் உருவானது.

மேலே தலை உயர்த்திப் பார்த்திப்பார்த்தபோது வானத்தின் கீழே தங்கியிருக்கவேண்டிய  ஏதோ ஒன்று தேவை என உணர்ந்தார். விரலை நீட்டினார். பூமி பிறந்தது
                               

.
வானத்தையும் பூமியையும் மாறிமாறிப்பார்வையிட்டபோது பூமி ஒழுங்கீனமாய் இருப்பதைக் கண்டார். அதிலே ஒரு வெறுமை தெரிந்தது. ஆழம் தெரிந்தது. ஆழத்தின்மேல் கனத்த காரிருள்  இருந்தது; உற்றுப்பார்த்தபோது தேவ ஆவி ஆனவர் பெரும் நீர்பெருக்கின் மீது அசைந்தாடிக் கொண்டிருந்ததைக் கண்டார்.
இருள் எப்படி நீங்கும் என்று சிந்தித்தபோது வெளிச்சத்தின் தேவை அவர் கருத்தில் உதித்தது 
பரமபிதா"வெளிச்சம் உண்டாவதாக!" என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.வெளிச்சம் அவரிடம் பேசிற்று.பரமபிதாவிடம் முதலில் பேச்சுக்கொடுத்தது வெளிச்சமே!
"கர்த்தரே, நான் தங்கள் சிருஷ்டி! உங்களை பணிந்து வணங்குறேன் " என்றது 
வெளிச்சம் நல்லது என்று பரமபிதா உணர்ந்தார். 
"கர்த்தரே, உங்கள் மகிமைக்கு என் தலைவணக்கம். ஒரு பணிவான வேண்டுகோள் " என்று வெளிச்சம் வேண்டியது.
"சொல்"பரமபிதா கட்டளையிட்டார்.

                                                          
"நானும் என் நிழலாகிய இருளும் ஒருவரோடு ஒருவர் கலந்து குழம்பியுள்ளோம். தயவு கூர்ந்து எங்களைத் தனித்தனியே பிரித்து விடுங்கள் " என்று வெளிச்சம் விண்ணப்பித்தது 
"உன் வேண்டுகோள் சரியானது" என்று கூறிப் பரமபிதா வெளிச்சத்தையும் இருளையும்  வெவ்வேறாகப் பிரித்தார்.
பரமபிதா "வெளிச்சமே! உன் பெயர்  பகல்" என்றார், 
இருளுப்பார்த்து "உன் பெயர்  இரவு"  என்றார்,   இருள் கவிந்து இரவு வந்தது. மெல்ல இருள் விலகிப் பகல் வந்தது. இவ்வாறு ஒரு மாலையும் அதைத்தொடர்ந்து ஓர் இரவும் , அதன்பின் ஓர்  விடியற்காலமும் வந்தன ஒரு நாள் கழிந்ததை பரமபிதா உணர்ந்தார் .
 முதலாம் நாள் ஆயிற்று.
விடிந்த பொழுதில் பெரிய நீர்ப் பெருக்கு குமுறிக்கொண்டிருப்பதை பரமபிதா கவனித்தார். அது இரண்டு பகுதிகளாவது நல்லது என்று அவருக்குத்தோன்றியது.
பின்பு பரமபிதா "நீர்ப்பெருக்கின்  மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகுக" என்று கட்டளையிட்டார். அப்படியே ஆகாய விரிவு உண்டாயிற்று.பிறகு நீர்ப்பெருக்கிலிருந்து மற்றொரு பகுதி பிரிக என்று கட்டளை இட்டார்,
அது அப்படியே ஆயிற்று
ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற நீர்ப்பெருக்கிற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற நீர்ப்பெருக்கிற்கும் ஒரு பிரிவை உண்டாக்கி  பரமபிதா 
ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.
பரமபிதா பிரளயம் போல் குமுறும் நீர்ப்பெருக்கைக் கவனித்தார். அது ஓரிடத்தில் ஒன்று சேரவேண்டும் என்று கருதினார், அதை அடுத்து  "வெட்டாந்தரை காணப்படுவதாக " என்றார்; அது அப்படியே ஆயிற்று.
பரமபிதா வெட்டாந்தரைக்குப் "பூமி" என்றுபேரிட்டார்.
ஒன்று சேர்ந்த நீர்ப்பெருக்கிற்குச் "சமுத்திரம்" என்றும் பேரிட்டார்; சமுத்திரம் தன ஆரவார அலைமுழக்கத்தால் பரமபிதாவை வணங்கியது 
பரமபிதா அது நல்லது என்று உணர்ந்தார்.
-தொடரும் .

No comments:

Post a Comment